மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “சமூக ஊடகங்களும் மத நல்லிணக்கத் தொடர்பாடலும்” எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு மட்டக்களப்பு விவேகானந்தா தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இக்கருத்தமர்வில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சமூக ஊடகங்களைப் பொறுப்புடனும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்துதல், பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துதல், போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை அடையாளம் காணுதல், தவறான தகவல்களால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, பல்வேறு மத மற்றும் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு சமூக ஊடகங்களை நேர்மறையான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் விளக்கங்களும் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
மேலும், மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் தவறான புரிதல்களையும் ஏற்படுத்தக்கூடிய தகவல்களைப் பொறுப்புடன் கையாளுதல், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்த்தல் மற்றும் சமூக ஊடகங்களை அமைதி, நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்கும் தொடர்பாடல் தளமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
சமூக ஊடகங்கள் பிரிவினையை உருவாக்கும் கருவியாக அல்லாமல், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில், பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இக்கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








