பிரதமரைச் சந்தித்த Ansell Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர்!

Ansell Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நதாலி ஹல்ஸ்ரோம் உள்ளிட்ட குழுவினர், 18.11.2026 அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இலங்கையில் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள், தொழில்வாய்ப்புகள் மற்றும் நாட்டின் முதலீட்டுச் சூழல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கையில் அன்செல் நிறுவனம் நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் செயற்பாடுகளையும் நாட்டின் உற்பத்தித் துறைக்கு வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் துறையின் பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகப் பொருத்தமான பணியிட வசதிகளையும் அனைவரையும் உள்ளடக்கிய தொழில்வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தத் தனியார் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர், மாணவர்களின் நடைமுறை அறிவையும் தொழில்வாய்ப்புக்குரிய திறன்களையும் மேம்படுத்துவதன் ஊடாக, திறமையானதும் எதிர்காலத் தொழில் உலகிற்குத் தயாரானதுமான தொழிற்படையை உருவாக்குவதே சீர்திருத்தங்களின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

மனிதவளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி நதாலி ஹல்ஸ்ரோம், கல்விசார் ஆற்றலும் திறன்களும் கொண்ட திறமையான பல்கலைக்கழகப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள Ansell நிறுவனம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

தொழில் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கு அர்ப்பணிப்பும் ஆர்வமுமே அத்தியாவசியமான பண்புகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் துறையின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல், செயற்றிறனை மேம்படுத்துதல், முதலீட்டுச் சூழலை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக உட்கட்டமைப்பு அபிவிருத்தியையும் தேவையான வசதிகளையும் வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவினர் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந் நிகழ்வில் லங்கா Ansell நிறுவனத்தின் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects