சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் ஒன்றுகூடும் விசேட நிகழ்வு, 12.09.2026 அன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், செப்டெம்பர் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சிறைக்கைதிகள் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூக நலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சர்வமத வழிபாடுகள், தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுச் செயற்பாடுகள், உளவியல் கருத்தரங்கு, தற்கொலைத் தடுப்பு தொடர்பான நடைபவனி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ரங்கன பெரேராவின் வழிகாட்டலில், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் சிறைக்கைதிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும், சிறைக்கைதிகள் தமது குடும்ப அங்கத்தவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பணிப்பாளரும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி இராசரத்தினம் முரளீஸ்வரன் கலந்துகொண்டார்.
அத்துடன், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










