சர்வதேச சிறுவர் தினம் இன்று!

சிறுவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்கள் எமது நிகழ்காலத்தின் மிக முக்கியமான பொக்கிஷங்கள். குழந்தைப்பருவம் என்பது சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் நகர வேண்டிய ஒரு பொற்காலம்.

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் ‘சர்வதேச சிறுவர் தினம்’ கொண்டாடப்படுகின்றது.

அதற்கமைய 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள் எனும் தொனிப்பொருளில் கொண்டாடுகின்றது.

இந்நாள் வெறும் கொண்டாட்டங்களுக்குரிய நாள் மட்டுமல்ல, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்யவும் சமுதாயம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைவூட்டும் ஒரு விழிப்புணர்வு நாளுமாகும்.

கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் அப்பால் சிறுவர்களின் உண்மையான நிலை குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின்படி, 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்படுகின்றனர்.

வாழும் உரிமை, பாதுகாப்புப் பெறும் உரிமை, வளர்ச்சி அடையும் உரிமை மற்றும் பங்கெடுக்கும் உரிமை ஆகிய நான்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளாகும்.

சாதி, மதம், இனம் அல்லது பொருளாதார நிலை என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் இந்த உரிமைகள் சமமாகச் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

வேகமாகக் நகரும் இந்த 2026 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் சூழலில், நமது சிறுவர்கள் சந்திக்கும் சவால்களும் அவர்களைச் சுற்றி நாம் உருவாக்க வேண்டிய பாதுகாப்பு அமைப்புகளும் புதிய கோணத்தில் அணுகப்பட வேண்டியவையாக உள்ளன.

முந்தைய தலைமுறையினரின் குழந்தைப்பருவம் இயற்கை சார்ந்த விளையாட்டுகளுடனும், நேருக்கு நேர் பழகும் சமூகத் தொடர்புகளுடனும் கழிந்தது.

ஆனால், இன்றைய சிறுவர்களின் உலகம் பெரும்பாலும் திரைகளுக்கு முன்னாலும் (Screens), டிஜிட்டல் தளங்களிலுமே சுருங்கிவிட்டது எனலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சி குழந்தைகளுக்குக் கற்றல் வாய்ப்புகளைத் தந்தாலும், இணையவழித் துஷ்பிரயோகங்கள், சமூக ஊடகச் சிக்கல்கள் மற்றும் திரைச் சேர்க்கை ஆகியவை அவர்களின் மனநலத்தையும் சமூக தொடர்புகளையும் பாதிக்கின்றன.

உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதால், சிறுவர் உழைப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

நவீனக் கல்விமுறை மற்றும் போட்டி உலகினால் சிறுவர்கள் அதிகளவிலான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறான சவால்களில் இருந்து அவர்களை விடுவிப்பதே தற்போதைய காலத்தில் எமது மிக முக்கிய தேவைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தப் பழக்குவதும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை அவர்களுக்குக் கற்றுத்தருவதும் இன்றைய அவசியத் தேவையாகும்.

வீடுகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பதும், அவர்களைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

பாடசாலைகள் வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் கற்பிக்காமல், ஒழுக்கம், மனிதநேயம், மற்றும் சமூகப் பொறுப்புகளை ஊட்டும் மையங்களாகச் செயல்பட வேண்டும்.

வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் உழைப்பு இல்லாத பாதுகாப்பான சூழலைச் சமுதாயம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறான வழிமுறைகள் ஊடாக சிறுவர்களின் உரிமைகள் பாதுகாப்பாக அமையுமானால், எதிர்காலச் சமுதாயம் ஆரோக்கியமானதாக மாறிவிடும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects