‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘Clean Sri Lanka’ தேசிய திட்டத்தின் மற்றுமொரு முக்கிய கட்டமாக, காத்தான்குடி நகர சபை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை (Material Recovery Facility – MRF) திறந்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் 26.11.2026 அன்று காத்தான்குடி நகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்க ரீதியாகத் தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘Clean Sri Lanka’ தேசியத் திட்டத்திற்கு அமைவாக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய காத்தான்குடி நகர சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வெளியேற்றப்படும் உக்காத கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம், அவை சுற்றுச்சூழலில் முறையற்ற விதத்தில் கொட்டப்படுவதை மட்டுப்படுத்துவதே மேற்படி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை நிர்மாணிப்பதன் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சூழல் மாசடைவதைக் குறைத்தல், கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை மீண்டும் வழங்குதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவாக சுழற்சி முறை பொருளாதாரத்தைக் (Circular Economy) கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செய்தல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், கழிவு முகாமைத்துவத்தின் போது குறைத்தல் (Reduce), மீளப் பயன்படுத்துதல் (Reuse) மற்றும் மீள்சுழற்சி செய்தல் (Recycle) ஆகிய 3R எண்ணக்கருவை நடைமுறையில் செயற்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதற்கமைய, வீடுகளிலிருந்து முறையாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடி உள்ளிட்ட மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து, முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகள் இந்நிலையத்தின் மூலம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
பிரதேச மக்களின் முழுமையான பங்களிப்புடன் தூய்மையானதும் ஆரோக்கியமானதுமான சூழலை உருவாக்குவதும், உள்ளூராட்சி சபைகளின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகவும் முறையாகவும் முன்னெடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, காத்தான்குடி பிரதேசத்தில் நிலையான கழிவு முகாமைத்துவ முறையொன்றை நிறுவி, தூய்மையான நகரச் சூழலையும் மேலும் பொறுப்புணர்வுள்ள சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








