சீனி உற்பத்தி மற்றும் கரும்புத் துறையை மேம்படுத்த இலங்கை – பிரேசில் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்!

நாட்டின் சீனி உற்பத்தியை அதிகரிப்பதையும், கரும்புத் துறையை அபிவிருத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று 25.11.2026 அன்று கைச்சாத்திடப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இந்தக் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் கீழ் கரும்பு அபிவிருத்தித் திட்டம் 36 மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதற்கான மதிப்பிடப்பட்ட மொத்த பெறுமதி 536,046 அமெரிக்க டொலர்களாகும்.

பிரேசில் அரசாங்கத்தின் பிரதான நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, பிரேசில் ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் சாவோ கார்லோஸ் கூட்டாட்சிப் பல்கலைக்கழகம் ஆகியவை நேரடித் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்பை வழங்குகின்றன.

இலங்கை தமது சீனித் தேவையில் ஏறக்குறைய 90 வீதத்தை இறக்குமதி செய்வதால், பெருமளவு அந்நியச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுகிறது.

இதற்கமைய, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலம் இறக்குமதிச் சீனியில் தங்கியிருப்பதைக் குறைத்து, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

மேலும், உள்நாட்டுக் கரும்புத் துறை எதிர்கொள்ளும் குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த சீனி மீட்பு விகிதம் மற்றும் அதிக உற்பத்திச் செலவு போன்ற சவால்களைக் கடப்பதற்கு, உலகின் முன்னணி கரும்பு உற்பத்தியாளரான பிரேசிலின் நவீன விவசாய நடைமுறைகள், ஆராய்ச்சித் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், பயிற்சித் திட்டங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் மூலம் இத்துறை சார்ந்த பங்குதாரர்களின் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துதல், கரும்பு உப உற்பத்திகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டு விவசாயிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் அதிகப் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் கிராமியப் பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்துதல் ஆகியன இந்த ஒத்துழைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects