சிறுவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துடன் சிறந்த முறையில் ஒத்துப்போவதாகவும், அவற்றை யதார்த்தமாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அத்துடன், சிறுவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது ஒரு சந்தர்ப்பத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், அதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது பெரியவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் 20.11.2026 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற “குட்டி அமாயாவும் நண்பர்களும் இலங்கைக்கான ஒரு விருப்பம்” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்கம், மேற்பார்வை, பிரதிநிதித்துவம் மற்றும் வரவுசெலவுத் திட்டப் பணிகள் ஊடாகக் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில் உள்வாங்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களின் குரலுக்குப் பாராளுமன்றத்தில் வாய்ப்பளிப்பதற்கும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், பத்தாவது பாராளுமன்றத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அதனைத் துரிதமாக ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.
அத்துடன், கடந்த எட்டு தசாப்தங்களாக இலங்கையின் சிறுவர்களின் சுகாதாரம், போஷாக்கு, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக UNICEF நிறுவனம் ஆற்றிய பணிகளையும் சபாநாயகர் பாராட்டினார்.
சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் தேவைகள் தேசியக் கொள்கைகள், சட்டவாக்கம் மற்றும் வரவு செலவுத் திட்டத் தீர்மானங்களை மேற்கொள்ளும்போதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
சிறுவர், மகளிர் மற்றும் இளைஞர் உரிமைகளை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ளடக்குவதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற பேதமின்றி இணக்கப்பாட்டுக்கு வருவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். அத்துடன், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் போஷாக்கின்மை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அரச கொள்கையொன்று அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட 55 சிறுவர் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்ததன் மூலம், சிறுவர்களின் குரலை கொள்கை உருவாக்கச் செயற்பாட்டில் உள்வாங்குவதன் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சிறுவர்களுக்கான பாராளுமன்ற சிறுவர் மன்றத்தைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சிறுவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டத் தீர்மானங்கள் அவர்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது பிரதேசத்திலுள்ள அனைத்துச் சிறுவர்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர் என UNICEF இலங்கைக்கான பதில் பிரதிநிதி பெகோனா அரெல்லானோ தெரிவித்தார்.
இலங்கையுடனான 80 ஆண்டுகால ஒத்துழைப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்துடன் மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, 2036ஆம் ஆண்டளவில் இலங்கை எத்தகைய நாடாக இருக்க வேண்டும் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான விடயங்கள் எவை என்ற இரண்டு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கிய “இலங்கைக்கான ஒரு விருப்பம்” பிரகடனத்தை ஏழு சிறுவர்கள் முன்வைத்தனர்.
மேலும், “சட்டவாக்கம், மேற்பார்வை, பிரதிநிதித்துவம் மற்றும் வரவு செலவுத் திட்டப் பணிகள் ஊடாக சிறுவர் உரிமைகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்றத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக UNICEF அதிகாரிகளால் விசேட அமர்வொன்றும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், UNICEF நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










