திருகோணமலையில் நங்கூரமிட்டுள்ள இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் ‘Sujay’!

இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘சமர்த்’ (Samarth) வகையைச் சேர்ந்த கடல்சார் ரோந்துக் கப்பலான (Offshore Patrol Vessel – OPV) ‘சுஜய்’ (Sujay), 23.11.2026 அன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

அதன் அடிப்படையில், இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான இது, செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் (Operational Turnaround – OTR), இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையினரால் (National Cadet Corps) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு சர்வதேச சைக்கிள் பயணத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்கும் நாளை 25ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும்.

கப்பல் திருகோணமலைக்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து, அதன் கட்டளை அதிகாரியான விவேக் டோக்ரா, கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்னாண்டஸ் மற்றும் இலங்கை கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கமாண்டர் ஐ.பி. விஜேசிங்க ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன, குறித்த கப்பலுக்கு விஜயம் செய்து அதன் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் தொழில்சார் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நடைமுறையில் எவ்வாறு கையாள்வது மற்றும் பயன்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை கடலோரக் காவல்படைப் பணியாளர்களுக்குப் பயிற்சிகளையும் இந்தியக் கப்பல் வழங்கவுள்ளது.

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் விஜயங்கள், இரு அண்டை நாடுகளினதும் கடல்சார் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.

இந்த விஜயங்கள் இந்தியாவின் ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘பிராந்தியங்கள் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ (MAHASAGAR) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects