உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல், தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், தற்போதைய மற்றும் எதிர்கால உலகத் தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையிலுள்ள பிரதான தொழிலாளர் சட்டங்களை ஆராய்ந்து அவற்றை ஒருங்கிணைத்து புதிய சட்டக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமென அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.
மேலும், உத்தேச புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்படுவதாகவும் அதற்கமைய தொழிலாளர் தரநிலைகள் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை பிணக்குகள் மற்றும் உறவுகள் தொழிற்சங்க உரிமைகள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொழில் ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பு, வேலை நேரம், விடுமுறை மற்றும் மேலதிக நேரம் தொடர்பான பிரதான ஏற்பாடுகள் மகப்பேற்றுப் பாதுகாப்பு தந்தைவழி விடுமுறை அத்துடன் வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
அத்துடன் பகுதிநேர ஊழியர்களின் உரிமைகள், தொழில் ஒப்பந்தங்களை முறைப்படுத்துதல், ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பயன்கள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல் தொடர்பான முன்மொழியப்பட்ட சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் தரநிலைகள் சட்டமூலத்தின் கீழ் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நான்கு அத்தியாயங்களும், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான labourmin.gov.lk ஊடாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களைத் தயாரிக்கும் செயற்பாட்டில் தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள், ஊழியர் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
இக் கலந்துரையாடல், தொழில் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜயசிங்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








