வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் 23.11.2026 அன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, இதனைக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராகும் முதலாவது இலங்கைப் பெண் என்ற வரலாற்றையும் அருணி ரணராஜா இதன்மூலம் படைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிரேஷ்ட இராஜதந்திரியான அவர், தற்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் இதற்கு முன்னர் நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் தனது புதிய கடமைகளைப் பொறுப்பேற்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, கனடாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ரோஹன அம்பகொல்ல நியமிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







