டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் வேலைத்திட்டம் இம் மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 135 பாடசாலைகளைச் சேர்ந்த 1,193 மாணவர்களுக்கு இதன்போது மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
கண்டி மாவட்டத்தில் கண்டி, தெல்தெனிய, வத்துகாமம் மற்றும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் இம் மாதம் 28 ஆம் திகதி வத்துகாமம் சமுத்திரதேவி மகளிர் வித்தியாலயத்தில் வழங்கப்படவுள்ளன.
அன்றைய தினமே கம்பளை மற்றும் தெவிநுவர கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு ஜினராஜ மாதிரி ஆரம்பப் பாடசாலையில் நடைபெறும்.
மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ, நாவுல, கலேவெல மற்றும் மாத்தளை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நவம்பர் 28ஆம் திகதி மாத்தளை விஜய தேசிய பாடசாலையில் நடைபெறும்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நவம்பர் 29 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், அன்றைய தினம் நுவரெலியா, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு ஹட்டன் ஹைலண்ட்ஸ் பாடசாலையில் நடைபெறும்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் புதிய வேலைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக, மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு இவ்வாறு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.
பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish அறக்கட்டளை ஆகியன இவ்வேலைத்திட்டத்திற்கான பங்களிப்பை வழங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









