அமைச்சுகளின் சிரேஷ்ட பதவிநிலை அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு!

2027 ஆம் ஆண்டிற்காகத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, அரச நிறுவனங்களின் வருடாந்தச் செயற்பாட்டுத் திட்டமிடல்கள் மற்றும் கொள்முதல் திட்டமிடல்களை முறையாகத் தயாரிப்பதும், அரச நிதி வளங்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் முகாமைத்துவம் செய்வதும் அத்தியாவசியமானது என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான வருடாந்த செயற்பாட்டுத் திட்டமிடல்கள் மற்றும் கொள்முதல் திட்டமிடல்களைத் தயாரிப்பது குறித்து அமைச்சுகளின் சிரேஷ்ட பதவிநிலை அதிகாரிகளுக்குத் தெளிவூட்டுவதற்காகக் 20.11.2026 அன்று கொழும்பில் நடைபெற்ற விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பேரினப் பொருளாதார நிலைமை, அரச நிதி முகாமைத்துவம், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள், அரச வருமானம் மற்றும் செலவுகள், அரச கடன் முகாமைத்துவம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுகின்ற அதேவேளை, அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட அரச நிதி வளங்களைச் சரியான முன்னுரிமைகளுக்கு அமையப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. மேலும், அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் கட்டமைப்புக்கு அமைவாக அரச நிறுவனங்கள் தமது செலவுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

வருகை தந்திருந்த அதிகாரிகளை வரவேற்பது மற்றும் நோக்கங்களைத் தெளிவுபடுத்துவது ஆகியன ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) எச்.எம்.கே.ஜே.பி. குணரத்ன மேற்கொண்டதுடன், அபிவிருத்தித் திட்டங்களுடன் தொடர்புடைய செயற்பாட்டுத் திட்டமிடல்கள் மற்றும் கொள்முதல் திட்டமிடல்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதன் அடிப்படை முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு தெளிவுபடுத்தினார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள விசேட முக்கியத்துவம் வாய்ந்த புதிய திட்டங்கள் குறித்தும், 2027 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களைத் துரிதமாகச் செயற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் (திட்டமிடல்) பிரியங்கர ஜயரத்ன விளக்கமளித்தார்.

2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச அபிவிருத்தித் திட்டங்களுக்குரிய செயற்பாட்டுத் திட்டமிடல்களுக்கமைய முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்காக, அவற்றை யதார்த்தபூர்வமாகத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (உணவுப் பாதுகாப்பு மற்றும் கொள்கை) என்.எஸ். வனசிங்க அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

வருடாந்த செயற்பாட்டுத் திட்டமிடல்களுக்கும் கொள்முதல் திட்டமிடல்களுக்கும் இடையில் உரிய ஒருங்கிணைப்பைப் பேணுதல், திட்டங்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் காலவரையறையைச் சரியாக இனங்காணுதல், கொள்முதல் செயன்முறையின்போது ஏற்படக்கூடிய தாமதங்களைக் குறைத்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்திற்குள் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் ஆகியவை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

திட்டமிடல்களைத் தயாரிப்பது முதல் அவற்றைச் செயற்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் அரச அதிகாரிகளுக்கு உள்ள பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அரச நிறுவனங்களின் திட்டமிடல் செயன்முறையை மேலும் பயனுள்ளதாக மாற்றியமைப்பதன் மூலம், அரச வளங்களின் விரயத்தைக் குறைத்து, மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகளின் தொழில்முறை அறிவையும் நிறுவனத் திறன்களையும் வலுப்படுத்துவதே இந்த செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான நிதி அதிகாரி (கொள்முதல்) ஜீ.எஸ்.கே. சமரதுங்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொறியியல் சேவைகள்) பொறியியலாளர்

ஐ.எம்.எஸ். பண்டார, திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ஆர்.எம்.யூ.பீ. அபேசேகர ஆகியோரும் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects