மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் நிலையம் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிடக் கட்டிடமும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா 21.11.2026 அன்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாலக்க அமரக்கோனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சர்வமதத் தலைவர்களின் ஆசியும் வழங்கப்பட்டது. இதன்போது தமிழ் கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி வர்த்தக சமூகத்தினரால் பொலிஸ் மா அதிபருக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், காத்தான்குடி பொலிஸ் ஆலோசனைக் குழுவினரால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார். நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
மேலும், பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன், பொதுமக்களுக்கு வினைத்திறனானதும் பாதுகாப்பானதுமான சேவைகளை வழங்குவதற்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுமெனவும் தெரிவித்தார்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையம், 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி தற்போதைய அமைவிடத்திற்கு மாற்றப்பட்டது. நீண்டகாலத்திற்குப் பின்னர் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி சம்பத் குமார லியனகே, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் லீலா ரத்ன, மட்டக்களப்பு மாநகர சபை மேயர், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர், ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட அரச மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








