மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் நோக்கில், “வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் – எதிர்காலத்தைத் தேர்ந்தெடுங்கள்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கண்காட்சி எதிர்வரும் 27.11.2026 அன்று காத்தான்குடி கடற்கரையில் நடைபெறவுள்ளது.
‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இக்கண்காட்சியை முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் 20.11.2026 அன்று பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ப. தினேஸ் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். ரசூல்ஷா ஆகியோரின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பான விளக்கக் காட்சிகள், விழிப்புணர்வு வீதி நாடகம், நடைபவனி மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனைச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு அதிகாரி எம். ரூதேசன், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் வி. ஜெகன், பிரம்ம குமாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள், மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதுடன், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









