அடுத்த நூற்றாண்டில் அரச பல் மருத்துவ சேவையானது சிகிச்சைகளை வழங்குவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், நோய்த் தடுப்பு, ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரச பல் மருத்துவ சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 22.11.2026 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
1926ஆம் ஆண்டு கொழும்பு பொது வைத்தியசாலையில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அரச பல் மருத்துவ சேவை, இன்று 106 விசேட பல் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 1,350 பல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களையும், நாடளாவிய ரீதியில் 600 சிகிச்சை நிலையங்களையும் கொண்ட வலுவான சேவை வலையமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
1943ஆம் ஆண்டு பல் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டமையும், 1947ஆம் ஆண்டு இலங்கையில் பயிற்சி பெற்ற முதலாவது பல் மருத்துவர்கள் குழு உருவாக்கப்பட்டமையும் இப்பயணத்தின் முக்கிய மைல்கற்களாகும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடம் ஆகியன நாட்டின் பல் மருத்துவக் கல்வியை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நூற்றாண்டுப் பயணத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள், விசேட மருத்துவ நிபுணர்கள், பாடசாலை பல் சிகிச்சையாளர்கள், பல் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், பல் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வாய் சுகாதாரம் என்பது பல் வலிக்குச் சிகிச்சையளிப்பது அல்லது பற்களைப் பிடுங்குவது மாத்திரமல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், அது ஒருவரின் ஊட்டச்சத்து, பேசும் திறன், தன்னம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் வலியுறுத்தினார்.
கடந்த கால தேசிய ஆய்வுகளின்போது 12 வயதுடைய சிறுவர்களிடையே சுமார் 67 சதவீதமாகக் காணப்பட்ட பல் சொத்தை பாதிப்பு, 2015–2016ஆம் ஆண்டுக்கான ஆய்வின்போது 30.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டமை, பாடசாலை பல் மருத்துவ சேவைகள் மற்றும் நோய்த் தடுப்பு வேலைத்திட்டங்களின் வெற்றியை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், வாய்ப் புற்றுநோய் தொடர்பான ஆபத்துகள் குறித்து மக்களுக்கு மேலும் விழிப்புணர்வூட்ட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புகையிலை, வெற்றிலை, பாக்கு மற்றும் தீங்கு விளைவிக்கும் மதுபானப் பாவனையின் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு வினைத்திறனான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பெரும்பாலானோர் பல் வலி ஏற்பட்ட பின்னரே பல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது குறித்து சிந்திக்கின்றனர். இந்த மனப்பாங்கை நாம் மாற்ற வேண்டும். நோய் ஏற்பட்ட பின்னர் அல்ல, நோய் ஏற்படுவதற்கு முன்னரே சுகாதாரப் பாதுகாப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும்” என பிரதமர் வலியுறுத்தினார்.
சமூகங்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை மேலும் நெருக்கமாகக் கொண்டுசெல்வதன் மூலம் நோய்த் தடுப்பு அணுகுமுறையை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருவரின் வருமானம், வசிக்கும் பிரதேசம் அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தரமான பல் மருத்துவ சேவையைப் பெறுவதற்கான உரிமை தீர்மானிக்கப்படக்கூடாது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பல் மருத்துவம் போன்ற நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகள் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அரச பல் மருத்துவ சேவையின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அஞ்சல் உறை ஆகியன பிரதமர் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் இதன்போது வெளியிடப்பட்டன.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பல் மருத்துவ சேவைகள்) வைத்தியர் சந்தன கஜநாயக்க உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மற்றும் பல் மருத்துவத் துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








