கிறிஸ்மஸ் தீவில் ஆரம்பமானது சிவப்பு நண்டுகளின் வருடாந்த இடப்பெயர்வு – வீதிகளை ஆக்கிரமித்த கோடிக்கணக்கான நண்டுகள்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு வடமேற்கே சுமார் 2,600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில், உலகின் வியக்கத்தக்க இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான சிவப்பு நண்டுகளின் வருடாந்த இடப்பெயர்வு ஆரம்பமாகியுள்ளது.

சுமார் 100 மில்லியன் சிவப்பு நண்டுகள் இனப்பெருக்கம் மற்றும் முட்டையிடும் நோக்கில் தீவின் உட்பகுதியில் உள்ள காடுகளிலிருந்து கடற்கரையை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.

இதனால் தீவின் வீதிகள் முழுவதும் சிவப்பு நண்டுகளால் நிறைந்துள்ளதுடன், அவற்றின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கையின் இந்த அரிய நிகழ்வை உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பார்வையிடும் வகையில், ‘பார்க்ஸ் அவுஸ்திரேலியா’ நிறுவனம் இவ்வாண்டு முதல் முறையாக நேரலை ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

நண்டுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் விசேட நண்டுப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சில வீதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேசிய பூங்கா முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வை அவதானிக்கச் சென்ற சுவீடனின் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நண்டுகளின் இடப்பெயர்வை காட்டுக்குள் சிவப்பு நதி ஒன்று பாய்வதற்கு ஒப்பிட்டு வியப்புத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சூரியனின் அமைவு அல்லது பூமியின் காந்தப்புலத்தை அடிப்படையாகக் கொண்டு நண்டுகள் தமது பயணப் பாதையைத் துல்லியமாகத் தீர்மானிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த இயற்கை நிகழ்வு, கிறிஸ்மஸ் தீவின் தனித்துவமான உயிரியல் பன்முகத்தன்மையையும் இயற்கையின் வியக்கத்தக்க படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects