பாடசாலை வாயிலில் காத்திருந்த தாய்மார்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பு – பொலன்னறுவை அதிபரின் முன்மாதிரியான முயற்சி!

பிள்ளைகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வரை காத்திருக்கும் தாய்மார்களின் நேரத்தை வருமானம் ஈட்டும் வாய்ப்பாக மாற்றும் நோக்கில், பொலன்னறுவை அபயபுர மகா வித்தியாலய அதிபர் எச்.ரி.சந்தன குமார முன்னெடுத்துள்ள தையல் பயிற்சித் திட்டம் பல குடும்பங்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை கல்வி வலயத்தின் லங்காபுர பிரிவிலுள்ள குறித்த பாடசாலையில் சுமார் 220 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

பிள்ளைகளுக்காகப் பாடசாலை அருகே பல மணிநேரம் காத்திருக்கும் தாய்மார்களின் நிலையை உணர்ந்த அதிபர், பாடசாலையில் கைவிடப்பட்டிருந்த பழைய தையல் இயந்திரமொன்றைத் திருத்தி, வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் உதவியுடன் பெற்றோருக்கான தையல் பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனூடாக பைகள், காற்சட்டைகள், ஆடைகள், தலையணை உறைகள் மற்றும் நுளம்பு வலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெற்றோர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்காகப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, இத்திட்டத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இரண்டு புதிய தையல் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தற்போது 10 பெற்றோர்களைக் கொண்ட குழுவினர் தையல் ஓடர்களைப் பெற்று வருமானம் ஈட்டி வருகின்றனர். அத்துடன், பாடசாலை வளாகத்திலேயே மாணவர்களுக்கான சீருடைகளைத் தயாரிக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதிகளவான பெற்றோர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதுடன், எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் தையல் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட ஒரு தையல் இயந்திரத்தில் ஆரம்பமான இம்முயற்சி, இன்று பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்மாதிரியான திட்டமாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects