கனடாவுக்கான நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் ரோஹண அம்பகொல்லவும் பிலிப்பைன்ஸுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் அன்சுல் பானு ஜானுவும் 17.11.2026 அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
இதன்போது, அவர்களது எதிர்காலக் கடமைகளுக்குப் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில், இலங்கைக்கும் – கனடாவுக்கும் இடையிலான உயர்கல்வித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும், குறிப்பாக இரு நாடுகளிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையே பங்காண்மைகளை ஏற்படுத்திக்கொள்வது குறித்தும் பிரதமர், கனடாவுக்கான நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடினார்.
மேலும், கனடாவில் வாழும் இலங்கையர் சமூகத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகளை இன்னும் வலுப்படுத்துவதற்காக அச்சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயுமாறு பிலிப்பைன்ஸுக்கான நியமிக்கப்பட்ட தூதுவரைப் பிரதமர் ஊக்கப்படுத்தினார். குறிப்பாக, அத்துறைகளில் நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்வது மற்றும் நிறுவனரீதியான பங்காண்மைகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம், விவசாயத் துறையின் மேம்பாடு ஆகியவற்றுக்காகச் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (IRRI) இலங்கை கொண்டுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்தவும் கலந்துகொண்டார்.





![]()









