கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்திற்கு 12.11.2026 அன்று விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்காக விரிவான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மீன் சந்தை வளாகத்தின் தற்போதைய நிலைமை, நிலவும் குறைபாடுகள் மற்றும் வியாபாரிகள், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களுடனும் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்தார்.
உள்நாட்டு நுகர்வோர் மாத்திரமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுதந்திரமாக வந்து செல்லக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட இடமாக குறித்த சந்தை வளாகத்தை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
பாரம்பரிய கடற்றொழில் தொழிற்துறையை நாட்டிற்கு உண்மையான பொருளாதார வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய நவீன வர்த்தகத்துறையாக மாற்றுவதற்கு ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சந்தை வளாகத்திற்குள் இடம்பெறும் ஒழுங்கீனமான மற்றும் அழுத்தங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த அமைச்சர், நுகர்வோர் எவ்வித அச்சமுமின்றி வந்து செல்லக்கூடிய ஒழுக்கமானதும் பண்பாடானதுமான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
சந்தை வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்த அமைச்சர், குறித்த சந்தை வளாகத்தைப் பாதுகாத்து அதன் எதிர்கால அபிவிருத்திக்காகப் பங்களிப்புச் செய்வதில் வர்த்தக சமூகத்திற்கும் விசேட பொறுப்பு உள்ளதாகவும் வலியுறுத்தினார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







