காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் திடீர் அனர்த்தங்கள் மற்றும் அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கும், அவற்றினால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைப்பதற்கும் முன்னாயத்த நடவடிக்கைகள் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவம் என்பது ஒரு துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் இம் மாதம் 06 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், 10.11.2026 அன்று நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சியின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கொழும்பு மாவட்டமும் கொழும்பு நகரமும் தனித்துவமான புவியியல் மற்றும் நகர்ப்புற அமைப்புகளைக் கொண்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகள் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கழிவு முகாமைத்துவம், நீர்வழிகளை முறையாகப் பராமரித்தல் மற்றும் தாழ்நிலப் பகுதிகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விரிவான வேலைத்திட்டங்கள் ஊடாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கையும் மழைநீர் தேக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார விளக்கமளித்தார்.
இதற்கமைய,
களனி கங்கைத் தாழ்நிலப் பகுதிகளுக்கான வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்ததாக, கொலன்னாவ பகுதியில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடுவெல பிரதேசத்திலுள்ள நீர்வழிகளைத் துப்புரவு செய்து அபிவிருத்தி செய்வதற்காக 450 மில்லியன் ரூபா செலவில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கொலன்னாவ பகுதியிலுள்ள நான்கு பிரதான வாவிகளைத் துப்புரவு செய்து அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கையின் கரைகளை அபிவிருத்தி செய்யும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
தொடர்ச்சியான பராமரிப்பு அவசியம்
இவ்வாறான அனர்த்தங்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு மேலும் தாமதமின்றி உரிய தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வாய்க்கால்கள் மற்றும் நீர்வழிகளைத் துப்புரவு செய்வது அனர்த்தங்கள் ஏற்படும் காலங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியல்ல எனவும், அவை தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகள் மற்றும் பிரஜாசக்தி வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில், நாடாளுமன்றப் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்புப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









