2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவுத்துவம் மற்றும் நிதியியல் கல்வியறிவு ஆகிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், உற்பத்திப் பொருளாதாரச் செயற்பாட்டில் பிரஜைகளின் செயற்திறன் மிக்க பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட விரிவான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவுத்துவம் மற்றும் நிதியியல் கல்வியறிவு ஆகிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகிய கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் 10.11.2026 அன்று நடைபெற்ற அகில இலங்கை வணிக அறிவு மற்றும் தொழில்முனைவுத் திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களைப் பாராட்டுதல் மற்றும் வணிகக் கல்விக்கான செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் நிலையங்களை ஆரம்பித்தல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை வணிக அறிவு மற்றும் தொழில்முனைவுத் திறன் மதிப்பீட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதமரின் தலைமையில் இதன்போது நடைபெற்றது.

வணிகக் கல்வியை மேலும் நடைமுறைச் சாத்தியமானதும் செயற்பாட்டு அடிப்படையிலானதுமான கற்றல் செயன்முறையாக மாற்றும் நோக்கில், பிராந்திய கற்றல் நிலையங்களை நிறுவும் வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பிக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை மூன்று கட்டங்களின் கீழ் நாடளாவியரீதியில் 100 நிலையங்களை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தின் கீழ், இவ்வருடம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 25 நிலையங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக, வணிகப் பாடத்துறைக்குரிய அடிப்படைப் பாடவிடயங்கள் தொடர்பான பல துணை வழிகாட்டி நூல்களும், புதிய கற்றல் முறைகளை உள்ளடக்கிய தொகுதி நூல் ஒன்றும் வெளியிடப்பட்டன.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இதுவரை காலமும் சாதாரண தரம் அல்லது உயர்தரத்தில் வணிகப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வணிகக் கல்வியை, 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப்படும் விரிவான வாழ்க்கைத் திறனாகப் பாடசாலைக் கட்டமைப்பில் இணைப்பது, நாட்டின் மக்களின் நிதியியல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான வெற்றிகரமான அணுகுமுறையை வழங்கும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், நிதி மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், தேசிய மட்டத்தில் நிதியியல் கல்வியறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

அனைவரையும் தொழிலதிபர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றாலும், நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் அதிகளவான மக்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, வெறுமனே இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்ட தொழில்முனைவுத்துவத்திற்கு அப்பால் சென்று, சுற்றுச்சூழலை நேசிப்பவர்களாகவும், மனிதநேயப் பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவர்களாகவும் தொழில்முனைவோரை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந் நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects