நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராய்தல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் 10.11.2026 அன்று முன்னெடுக்கப்பட்டன.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் பி.எம். பியதிலக்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.கே.சி. சமரக்கொடி, இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணப் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜே. லம்பேர்ட், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் போக்குவரத்து அதிகாரி ஜே.என். ரவிச்சந்திரன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணப் பணிப்பாளர் டி.பி.எஸ்.கே. திஸாநாயக்க, யாழ் மாநகர சபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









