நுவரெலியாவின் வரலாற்றுத் தபால் நிலையத்தைப் பாதுகாப்பது என்பது பழைய கட்டடமொன்றைப் புனரமைப்பதற்கு மாத்திரம் மட்டுப்பட்டதல்ல எனவும், தேசிய மரபுரிமையைப் பாதுகாத்து நாட்டின் சுற்றுலாத்துறைக்கு புதிய பெறுமதியைச் சேர்க்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும் எனவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் ரூ. 78.34 மில்லியன் மதிப்பீட்டுச் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடி தபால் நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 05.11.2026 அன்று இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய கட்டடம் நுவரெலியா பிராந்திய தபால் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் தபால் செயற்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான ஆலோசனைப் பணிகளை கட்டடத் திணைக்களம் மேற்கொள்வதுடன், நிர்மாணப் பணிகள் தபால் திணைக்களத்தின் கட்டடங்கள் மற்றும் காணிகள் பிரிவின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா வரலாற்றுத் தபால் நிலையம், இலங்கையின் கட்டடக்கலை மரபுரிமையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சிவப்பு செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த இருமாடிக் கட்டடம் ஆங்கிலேயர்களின் டியூடர் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், அதன் தனித்துவமான மணிக்கூட்டுக் கோபுரம் நுவரெலியா நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இலங்கை கடற்படையின் தொழிலாளர் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இக்கட்டடத்தின் பாதுகாப்புப் பணிகள், கட்டடத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் மேற்பார்வையில் இடம்பெறுகின்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், குறித்த கட்டடம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுவரெலியா பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்கள் தொடர்பான தகவல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கும் சுற்றுலா ஊக்குவிப்பு மையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கு இயற்கை வளங்கள் மாத்திரம் போதுமானதல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை அழகுடன் நாட்டின் வரலாற்று, கலாசார மற்றும் கட்டடக்கலை மரபுரிமைகளையும் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்குப் பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
காலி கோட்டை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் போலவே நுவரெலியா தபால் நிலையமும் தேசிய மரபுரிமையையும் சுற்றுலாத்துறையையும் இணைக்கும் பெறுமதியான வளமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, நுவரெலியா யூனிக் வியூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இருமாடி சுற்றுலா விடுதி மற்றும் இருமாடி உத்தியோகபூர்வ இல்லக் கட்டடம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
குறித்த சுற்றுலா விடுதிக்கு ரூ. 199 மில்லியனும், உத்தியோகபூர்வ இல்லக் கட்டடத்திற்கு ரூ. 106.5 மில்லியனும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 2025, 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் கட்டம் கட்டமாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக ரூ. 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 தபால் நிலையங்களுக்கான நிர்மாணப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா புதிய தபால் நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், அந்த ஆண்டில் அடிக்கல் நாட்டப்படும் எட்டாவது கட்டடமாக இது அமைந்துள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டில் தபால் நிலையங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தைப் பாதுகாப்பதுடன், நாடளாவிய ரீதியில் 88 தபால் நிலையங்களின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
2025ஆம் ஆண்டிலும் இதற்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த நிதியின் மூலம் சுமார் 200 தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 23 பிரதான தபால் நிலையங்களும் 96 உப தபால் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு தடையற்ற தபால் சேவையை வழங்குவதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாநகர முதல்வர் உபுலி வனிகசேகர, நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன், தபால்மா அதிபர் ருவன் சத்குமார உள்ளிட்ட தபால், கட்டட மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








