அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளுக்கான அக்ரஹார சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, அதன் நன்மைகளை வினைத்திறனுடன் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் 03.11.2026 அன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றுள்ளது.
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (NITF) பிரதானிகள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளின் சுகாதாரப் பாதுகாப்பையும் அவர்களது குடும்பங்களின் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை மேலும் பயனுள்ளதொரு திட்டமாக மாற்ற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் நாட்டுக்கு ஆற்றும் சேவைக்கு உரிய மதிப்பளிப்பதில் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமான பொறுப்பாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவசர சுகாதாரத் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தமக்கு வலுவான காப்புறுதிப் பாதுகாப்பு உள்ளது என்ற நம்பிக்கையை அரச ஊழியர்களிடையே ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, காப்புறுதி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதில் பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குதல், நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளை மேலும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், தற்போதைய சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்றவாறு அக்ரஹார சாதாரண, வெள்ளி மற்றும் தங்கக் காப்புறுதித் திட்டங்களையும், ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளுக்கான காப்புறுதித் திட்டத்தையும் மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயனாளிகள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்கி, காப்புறுதி நன்மைகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இக்காப்புறுதித் திட்டத்தின் ஊடாக அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்நோயாளர் சிகிச்சை, சத்திரசிகிச்சைகள், மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்பு தொடர்பான சுகாதாரத் தேவைகள், மூக்குக்கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் தேவைகளுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அத்துடன், புற்றுநோய், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற பாரதூரமான நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் அங்கவீன நிலைகள், மரணம் ஆகியவற்றுக்கும் இத்திட்டத்தின் ஊடாக நன்மைகள் வழங்கப்படுகின்றன.
இக் கலந்துரையாடலில் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் பணிப்பாளர் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி குணவர்தன, பணிப்பாளர் எச்.எம்.டி.பி. ஹேரத், நிதி அமைச்சின் பிரதம கணக்காளர் ஈ.எம்.யூ.எஸ். ஏகநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க அபேகோன், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலஹப்பெரும, விசேட வைத்திய நிபுணர் சம்பிகா விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் தாரகா எரந்தி ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








