எதிர்கால உலகிற்கு ஏற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவது கல்வி மாற்றத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மகரகம மற்றும் ருவன்புர தேசிய கல்வியியல் கல்லூரிகளில் நிறுவப்பட்ட தொலைதூரக் கற்றல் வசதிகளுடன் கூடிய முன்மாதிரி ஸ்மார்ட் வகுப்பறைகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் 27.10.2026 அன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, டிஜிட்டல் செயலணியின் மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரோப், Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர் கல்வி ஆணையாளர் நாயகம் இரோஷிணி கே. பரணகம உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Wei Huaxiang ஆகியோரின் பங்கேற்புடன், மகரகம தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையும் தொலைதூரக் கற்றல் வசதிகளும் ஆசிரியப் பயிலுநர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன. இதற்கு இணையாக, ருவன்புர தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வசதிகள் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையில் டிஜிட்டல் கற்றல் வசதிகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் உள்ள 20 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கும் இவ்வாறான ஸ்மார்ட் வகுப்பறைகளையும் தொலைதூரக் கற்றல் வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர் கல்வியின் தரத்தை உயர்த்துதல், ஆசிரியர் மேம்பாட்டுச் செயற்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட கல்வித்துறையில் நிலவும் சவால்களுக்குப் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியன இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன்போது, மகரகம தேசிய கல்வியியல் கல்லூரிக்காகத் தயாரிக்கப்பட்ட கற்றல் முகாமைத்துவக் கட்டமைப்பையும் (Learning Management System – LMS) பிரதமர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
அத்துடன், பல தேசிய கல்வியியல் கல்லூரிகளை இணைத்து, புதிய தொலைதூரக் கற்றல் வசதிகள் ஊடாக முன்மாதிரியான கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், சீன அரசாங்கம் மற்றும் Huawei நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்களின் மூலம், கற்பித்தல் செயற்பாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் ஆசிரியர்களுக்கு வழங்க முடிவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கும் பாடசாலை முறைமையின் அபிவிருத்திக்கும் சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், தன்னம்பிக்கையும் திறன்களும் நிறைந்த ஆசிரியர்களை உருவாக்குவதன் மூலம் திறமையும் படைப்பாற்றலும் கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்கி, நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









