மலையக வீதிகளில் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் வேலைத்திட்டம்!

அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ், மலையகத்தின் ஆபத்தான வீதிப் பகுதிகளில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துகளால் பலர் காயமடைவதுடன், பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

மலையகத்தின் பல வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ள போதிலும், ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால், எதிரெதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் சந்தர்ப்பங்களில் சில வாகனங்கள் வீதியை விட்டு விலகிப் பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சாரதிகளின் கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விபத்துகள் இடம்பெறுகின்ற போதிலும், மலையகப் பகுதிகளில் ஆபத்தான வளைவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளைக் கொண்ட வீதிகளில் முறையான பாதுகாப்பு வேலிகள் இல்லாமையும் விபத்துகளுக்கான முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பல குடும்பங்களும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், வீதி விபத்துகளைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மலையகத்தின் ஆபத்தான வீதிப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தலவாக்கலை – டயகம பிரதான வீதியிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆபத்தான வீதிப் பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையக வீதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்த மக்கள், தற்போது முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

வீதிப் பாதுகாப்பு என்பது வெறுமனே கட்டுமானப் பணியல்ல; அது உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். எனவே, மலையகத்தின் ஏனைய ஆபத்தான வீதிப் பகுதிகளிலும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects