ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஆசிய மன்றத்தின் (The Asia Foundation) பிரதிநிதிகளை 07.10.2026 அன்று பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பணிப்பாளர் சபையின் தவிசாளருமான தூதுவர் கேத்லின் ஸ்டீபன்ஸ், தூதுவர் ரொபர்ட் ஓ. பிளேக் ஜூனியர் ஆகியோருடன் ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, இலங்கை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையுடனான அவ்வமைப்பின் நீண்டகாலப் பங்களிப்புக்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்றிட்டங்களைப் பாராட்டிய அக்குழுவினர், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதிலும் நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பாராட்டினர்.

இச்சந்திப்பின்போது, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை, பெண்களின் பொருளாதார வலுவூட்டல், பராமரிப்புப் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல், உள்ளடங்கலான அபிவிருத்தி ஆகியவை உள்ளிட்ட, இலங்கையில் தாம் முதன்மையாக ஈடுபட்டுவரும் மற்றும் ஆர்வம் காட்டும் துறைகள் குறித்து ஆசிய மன்றத்தினர் விளக்கமளித்தனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு இணங்கச் செயற்படும் அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல், முதலீடுகளை ஈர்த்தல், உள்ளடங்கலான மற்றும் சமத்துவமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமைகள் குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அக்குழுவினருக்கு எடுத்துரைத்தார்.

மேலும், நல்லாட்சியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரச நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிறுவனப் பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரித்தல், ஊழலுக்கு எதிராகப் போராடுதல், அரச வருவாய் திரட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்துக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு ஆதரவளிப்பதற்குமாகக் கல்வி மறுசீரமைப்பும், தொழிற்கல்வி மற்றும் திறன்சார் கல்வியை விரிவுபடுத்துதலும் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன என்றும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

குறிப்பாக, பொதுச் சேவை விநியோகத்தை மேம்படுத்தவும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் டிஜிட்டல் பரிவர்த்தனையையும் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects