இலங்கையின் அத்தியாவசிய காசநோய் (TB) எதிர்ப்பு மருந்துகளின் இருப்பை உறுதி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் சுமார் 3 தொன் எடையுள்ள காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இன்று (07.10.2026) நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்த மருந்துத் தொகையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனியும் கலந்துகொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, நாட்டில் அத்தியாவசிய காசநோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் ஆதரவுடன் இந்த மருந்துகள் பெறப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட மருந்துத் தொகுதியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மாத்திரைகள் அடங்கியுள்ளன. இதன் மதிப்பு சுமார் 5.2 கோடி இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காசநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய முதல் வரிசை மருந்துகளும் இந்தத் தொகுதியில் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்ய பங்களிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொது சுகாதாரத் தேவைகளுக்கு இந்தியா உரிய நேரத்தில் வழங்கும் உதவிக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா 500 லீற்றர் தொழில்நுட்ப மலத்தியனையும் நன்கொடையாக வழங்கியிருந்தது.
சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால மற்றும் விரிவான ஒத்துழைப்பு நிலவி வருகிறது. வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்கிறது.
அவசர மற்றும் உடனடி மருத்துவத் தேவைகளின் போதும் இந்தியா இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகிறது.
இலங்கை அரசாங்கமும் மக்களும் அடையாளப்படுத்தும் முன்னுரிமைகளுக்கு பதிலளிப்பதில் கவனம் செலுத்தும், மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி கூட்டாண்மைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த சமீபத்திய உதவி பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








