நாட்டின் மின்சாரத் துறையில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லாக, நாட்டின் முதலாவது வணிக ரீதியிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு 10.09.2026 அன்று திறக்கப்பட்டு, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
காலி மின் கட்டமைப்பு துணை மின்நிலையத்திற்கு அருகில் படத்துவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன சேமிப்புத் தொகுதியானது 10 மெகாவாட் (40 MWh) திறன் கொண்டதாகும்.
சூரியஒளி மற்றும் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தைச் சேமித்து வைத்து, தேசிய மின் கட்டமைப்பில் தேவை அதிகரிக்கும் போது மீண்டும் விநியோகிக்க இத்தொகுதி உதவுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர், மின் அமைப்பை நிர்வகிக்கவும் மின் கொள்முதலை மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ‘தேசிய அமைப்பு இயக்குனர்’ (NSO Pvt Ltd) நிறுவனத்தால் 2025 இல் கோரப்பட்ட 16 BESS அலகுகளில், செயல்பாட்டிற்கு வந்துள்ள முதலாவது அலகு இதுவாகும்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘Khen Energy Ltd’ நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான ‘WKV Hydro Technics’ இன் துணை நிறுவனமான Galilee BESS Limited இத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இத்திட்டம் தேசிய மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை எட்டுவதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







