நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் 14.09.2026 அன்று முதல் ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 14.09.2026 அன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இந்த உள்ளூராட்சி வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய தேசிய நிகழ்ச்சி திட்டம் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தப்படும்.

பொதுமக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள், இலக்கியத் தேவைகள் உள்ளடங்கலாக அனைத்து விடயங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த உள்ளூராட்சி வாரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

14.09.2026 அன்றைய தினம் நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், அமைச்சுகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வருவதற்கு பதிலாக, பொதுமக்களை நாடிச் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்பாடு இன்றைய தினத்தில் இடம்பெற்றதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், (15.09.2026) இன்றைய தினம் பொதுப் பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்தந்தப் பகுதிகள் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரித்தல் மற்றும் புதிதாகச் சேர்த்தல் இதன் மூலம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் செப்டெம்பர் 16ஆம் திகதி சுற்றாடல் சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், “நாளைக்கு ஒரு கன்று மற்றும் மர நடுகை” என்ற அடிப்படையில் இந்த நாள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினர் மத்தியில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்களில் அவர்களைச் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சுற்றாடலில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் அன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

செப்டெம்பர் 17 ஆம் திகதி சுகாதாரம், துப்புரவு மற்றும் டெங்கு ஒழிப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அங்கு இனிவரும் மழைக்காலத்துடன் டெங்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயத்தைத் தடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாத்து அவர்களை இணைத்துக்கொண்டு டெங்கு ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

செப்டெம்பர் 18ஆம் திகதி இலக்கியம், கல்வி, நூலகம், நலன்புரி மற்றும் விளையாட்டு தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய அந்தத் துறைகள் சார்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் இலக்கியப் படைப்புகளைப் பாராட்டுதல், சுவைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதி நாளான செப்டெம்பர் 19ஆம் திகதி சிறந்த சேவையை வழங்கிய அரசு ஊழியர்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் பாராட்டுதல், அவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த உள்ளூராட்சி வாரத் திட்டத்தின் மூலம் கிராமிய மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் உள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, பொதுமக்களை இணைத்துக்கொண்டு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்கனவே திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects