பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் குறித்து சீனத் தூதுவர் சிறப்பு கவனம்!

இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை 14.09.2026 அன்று சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் (Smart Agriculture) குறித்து சீனத் தூதுவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.

அலைபேசி செயலிகள் மூலம் பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் நிலைகளையும் அளவிட்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கியுள்ளதாகவும், அத் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் ரகங்கள் மற்றும் வறண்ட, ஈரமான வானிலை நிலைகளுக்கு ஏற்ப நிலத்தை தயார்படுத்தும் தொழில்நுட்பமும் சீனாவிடம் உள்ளதாக சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதனிடையே, இச்சந்திப்பில் கலந்துகொண்ட விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கையின் தற்போதைய விவசாய நிலை குறித்து விளக்கமளிக்கையில், இலங்கை அரிசியில் தன்னிறைவு பெற்ற நாடு எனக் குறிப்பிட்டார்.

மேலும், மக்காச்சோளத் தேவையில் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்குத் தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசு வழங்கும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் ஏற்கனவே பங்களிப்பு செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects