எல் நினோ தாக்கங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வறட்சி உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் பருவப் பெயர்ச்சியால் ஏற்படவுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலான விசேட கூட்டம் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில்
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 08.09.2026 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக், கோறளைப்பற்று மேற்கு கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஹபீல், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எம்.இனாமுல்லாஹ், உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் அப்துல் றஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதி, மீன்பிடிப் பரிசோதகர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராமிய மட்ட அனர்த்த முன்னாயத்தக் குழு உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், இறால் பண்ணையாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எல் நினோ தாக்கங்களினால் ஏற்படக்கூடிய குடிநீர் பற்றாக்குறை, விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அத்துடன் எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
வறட்சியான காலநிலையினால் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
எல் நினோ தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விவசாய மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்தல், கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை திறம்பட எதிர்கொள்வதற்காக அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது கலந்து கொண்ட துறைசார் அதிகாரிகள், தத்தமது நிறுவனங்களின் கீழ் மேற்கொள்ளக்கூடிய முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
கலந்து கொண்ட அனைத்து திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக மட்ட பிரதிநிதிகள் கடந்த காலங்களில் அணர்த்தங்களின் போது வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்திலும் தங்களது பங்களிப்புக்களை வழங்குமாறு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









