2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட ஒகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,962 பேரும் பதிவாகியிருந்தனர்.
இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,760 ஆகும்.
தென் மாகாணத்தில் 13,931 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,788 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,910 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,444 ஆகும்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 19,008 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,043 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,154 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,181 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதி-அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








