வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் களவு, கொள்ளை, அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, வாகனம் மற்றும் சாரதியின் விபரங்களைச் சரிபார்ப்பதுடன், தங்களின் நேரலை இருப்பிடத்தை (live location) நம்பிக்கையான நபர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அடங்கும்.

வாடகை வாகன சாரதிகள் அல்லது வாடகை வாகன சேவைகள் மூலம் பயணிகளுக்கு உதவும் நபர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து அறிக்கைகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், பயணிகள் தாங்கள் ஏறும் வாகனம் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட பதிவுபெற்ற வாகனமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் பதிவு எண், வகை (Model) மற்றும் சாரதியின் பெயரைச் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதே வேளை, இரவு வேளையில் பயணம் செய்யும் பயணிகள், சாரதி தங்களை அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் அழைத்துச் செல்ல முயன்றால் விசேட கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பயணிகள் தங்களது மொபைல் போன்கள் அல்லது கூகுள் மேப்ஸ் (Google Maps) மூலமாக தங்களது நேரலை இருப்பிடத்தை குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது பிற நம்பிக்கையான நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், இலக்கை அடையும் வரை தங்களின் இருப்பிடம் குறித்து யாராவது விழிப்புடன் இருப்பதை உறுதி செய்யுமாறும் வூட்லர் கேட்டுக்கொண்டார்.

பயணத்தின்போது அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரை உட்கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பயணிகளுக்கு உணவோ பானங்களோ வழங்கப்பட்டு, அவர்கள் மயக்கமடையச் செய்யப்பட்டு குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வாடகை வாகனங்களில் பயணிக்கும் போது பணம், மடிக்கணினிகள் , மொபைல் போன்கள், நகைகள் போன்ற பொருட்களை வெளியில் தெரியும்படி வைப்பதில் கவனமாக இருக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பயணத்தின் போது சந்தேகம் அளிக்கும் சூழ்நிலையை எதிர்கொண்டாலோ அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர உதவி இலக்கத்திற்கோ அல்லது 118 என்ற அவசர தகவல் சேவைக்கோ தொடர்பு கொண்டு வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் வாடகை வாகன சாரதிகளுக்கும் பொருந்தும் என்பதை நினைவுபடுத்திய பொலிஸார், பயணிகளை ஏற்றிச் செல்லும்போது சரியான முறையில் நடந்து கொள்ளுமாறு சாரதிகளையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects