பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தொடர்பான 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்!

பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துக

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பது தொடர்பான அனைத்து புனர்வாழ்வு நிறுவனங்களையும் உடனடியாக ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டு வர ஜனாதிபதி அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிக்கஅரசாங்கம் ஆரம்பித்துள்ள ” முழு நாடு மே ஒன்றாக” தேசிய செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரின் தீவிர பங்களிப்பையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் அனைத்து புனர்வாழ்வு நிறுவனங்களையும் உடனடியாக ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்குமான அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, ஆபயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, புனர்வாழ்வு பணியகம், தேசிய பொலிஸ் பயிற்சிகளுக்கான நிறுவனம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரிவு ஆகியவற்றினால் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்த “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டிற்கு மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

அதன்படி, 417.48 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை பொலிஸின் போதைப்பொருள் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறியும் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கும் திட்டம், 13.54 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் கல்லடி பொலிஸ் பயிற்சி மையத்தை புனர்வாழ்வு மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் 288.15 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் ஆபயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்கும் திட்டத்தின் இதுவரை கிடைத்த முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வு பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் திட்டம், அதேபோன்று விசேட அதிரடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள 608 பொலிஸ் நிலையங்களில் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு பணத்தை செலவிடுகிறது. அந்த செலவைக் குறைப்பதற்காக பொலிஸிற்கு நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிப்பதன் அவசியமும் இங்கு விவாதிக்கப்பட்டது.

இலங்கை பொலிஸில் தற்போதுள்ள வாகனங்களில் கணிசமான பகுதி 20 ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதால், பராமரிப்புச் செலவைக் குறைக்கும் வகையில் புதிய வாகனங்களை கொள்முதல் செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.

உத்தேச பொலிஸ் தலைமையகக் கட்டிட நிர்மாணம், பொலிஸ் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொலிஸ் நலன்புரிப் பிரிவின் ஒதுக்கீட்டின் கீழ் முன்மொழியப்பட்ட மிரிஹான பொலிஸ் விளையாட்டு வளாகத்தின் நிர்மாணம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் வெலிகம மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் சில மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட உளளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், சீருடைகளை புதுப்பித்தல், பொலிஸ் அதிகாரிகளின் அதிக பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரிகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனம் திரும்பியது.

பாடசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் விழிப்புணர்வுத் திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அப்பணிகளுக்காக ஆலோசகர்களின் குழுவொன்றை உருவாக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுயமாக புனர்வாழ்வு பெற முன்வருபவர்களுக்காக, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் 3 மாத குடும்ப ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் வெற்றி காரணமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சுயமாக புனர்வாழ்வு பெற முன்வரும் போக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறி இருப்பதால் தேசிய திட்டங்களில் அவர்களை இணைத்துக் கொள்வதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது. இது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.

அத்துடன், சமூக சேவைகள் திணைக்களம், இலங்கை பொலிஸ், நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கீழ் தனித்தனியாக நடைமுறைப்படுத்தப்படும் புனர்வாழ்வுத் திட்டங்களுக்குப் பதிலாக, அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்த முறையான புனர்வாழ்வுச் செயற்பாட்டை தீவு முழுவதும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects