கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா – 2026ஐ முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விழா நாளை (08.08.2026) மற்றும் நாளை மறுதினம் (09.08.2026) ஆகிய தினங்களில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆரம்ப நிகழ்வாக நாளை (08.08.2026) காலை 9 மணிக்கு விசேட வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.
இப்பேரணியானது காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்து கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, சுதந்திர மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை மற்றும் லோட்டஸ் வீதி ஊடாகத் துறைமுக நகரில் நிறைவடையும். இதனால் குறித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களுக்காகப் பட்டம் விடும் திருவிழாவும் இசை நிகழ்ச்சியும் நாளை மறுதினம் (09.08.2026) நடைபெறவுள்ளது.
இதன்போது போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 300 போக்குவரத்து பொலிஸார் உட்பட 1,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அன்று வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக எம்.ஓ.டி வளாகம், ஷங்ரிலா அருகில் உள்ள வளாகம், சைத்திய வீதி, துறைமுக நகர வளாகம், கடல் மாவத்தை, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை உள்ளிட்ட கட்டணமின்றிய வாகனத் தரிப்பிடங்களும், யூனியன் பிளேஸ், லேக்ஹவுஸ் முன்புறம் மற்றும் பழைய மானிங் சந்தை உள்ளிட்ட கட்டணம் செலுத்தும் தரிப்பிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








