வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை – நீர்பாசனத் திணைக்களம்

இன்றைய தினம் பலத்த மழை எதிர்பார்க்கப்படாததால், தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (04.08.2026) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இதனைத் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் மழை பெய்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், களனி கங்கையின் மேல் பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் ஆகியவற்றின் நீர்மட்டமும் குறைந்து வருவதுடன், கித்துல்கல பகுதியில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும் அது ஆபத்தான நிலைமை அல்ல எனத் தெரிவித்தார்.

அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலைப் பகுதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், களனி கங்கையைச் சுற்றியுள்ள வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.

களு கங்கையைச் சுற்றியுள்ள இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதால், அந்த ஆற்றுப் படுகையிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என சூரியபண்டார தெரிவித்தார்.

நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு கிடைக்கவில்லை என்பதுடன், இன்றைய தினமும் 25 மில்லிமீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அந்த ஆறுகளின் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டங்களும் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அந்த நீர்மட்டங்கள் அபாயக் கட்டத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் குறிப்பிடத்தக்க மழை பெய்யாவிட்டால், தற்போதுள்ள நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எப்படியிருப்பினும், வரும் நாட்களில் ஈர வலயத்தின் மேல் சரிவுப் பகுதிகளில் மழை பெய்தால், ஏற்கனவே உயர் நீர்மட்டத்தில் இருக்கும் களனி கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார மேலும் கோரியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects